Friday, September 28, 2012

சிதம்பரத்தில் தொடர்வண்டி மறியல்!



காவிரி உரிமை மீட்க அக்டோபர் 4  வியாழன் அன்று சிதம்பரத்தில் தொடர்வண்டி மறியல்!
காவிரி மீட்புக்குழு கூட்டத்தில் முடிவு.

சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சி  நகர செயலாளர் திரு. கு சிவப்பிரகாசம், தமிழக உழவர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு, மா.கோ.தேவராசன். தலைவர், கோ.சிவராமன் செயலாளர், சி.ஆறுமுகம், தமிழர் தேசிய இயக்கம் திரு.வை.இரா.பாலசுப்பிரமணியம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர்,  திரு.லெ.சீனுவாசன்,  தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர், திரு ஆ.குபேரன், நாம் தமிழர் கட்சி  நகர ஒருங்கிணைப்பாளர் திரு,புகழேந்தி, தமிழக மாணவர் முன்னணி செயலாளர், திரு வே.சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் கூட்ட முடிவுகள் குறித்து திரு, கி.வெங்கட்ராமன், வெளியிட்டுள்அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளதாவது-

காவிரியில் தமிழகத்துக்கு உரிய சட்ட உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் இந்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. கர்நாடகத்தின் அடாவடிக்கு துணை போகிறது. இதனால் தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. மேலும் 16 லட்சம் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்பதற்காகவும், தண்ணீரை பெறுவதற்காகவும், கடலுர்  மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்கள், கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து விவாதித்தோம்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும்,   கர்நாடக அரசு அக்டோபர் 30-ந்தேதி வரை தினமும் 2 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க கோரியும்  சிதம்பரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் வரும் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை பரப்புரை மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.   வருகிற  அக்டோபர்  4-ந் தேதி வியாழன் காலை சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில்  அனைத்துக் கட்சிகள், உழவர் அமைப்புகள் பங்குபெறும்  ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மறியல் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக உழவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திரளாகப் பங்கேற்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  

                         காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்,

Tuesday, September 25, 2012


Sunday, September 23, 2012

இன்று காவிரியில் ஒரு சொட்டு நீரும் கிடையாது என்கிறான் கன்னடவன் காவிரியின் விலங்கொடிக்கும் அரசியல் அதிகாரம் தமிழனுக்கு உண்டா?

Monday, September 10, 2012


அனுப்புதல்:   சி.ஆறுமுகம்,
              கடலூர் மாவட்டச் செயலர்,
              தமிழக உழவர் முன்னணி
              683/3 சிங்காரவேலர் தெரு,
              சிவஜோதி நகர், சிதம்பரம்.608001

பெறுதல்:     மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,
              செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
              சென்னை. 600009

அம்மையீர்!
              பொருள்: காவிரி நீரைப் பெற கர்நாடகத்தின் பாதைகளை மூடுதல்- தொடர்பாக

              ஏற்கெனவே கர்நாடக அரசு நமக்குரிய காவிரி நீரைத் தடுத்து ஒரு பொருளாதார தடையை தமிழகத்தின் மீது விதித்திருக்கிறது. தமிழக அரசு எதிர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சம்பா சாகுபடியை நேரடி விதைப்பு மூலமும், சமுதாய நாற்றங்கால் மூலமும் மேற்கொள்ளும் படி கூறுவது காவிரி உரிமையை இழக்கும் செயலாகும். இது காவிரிப் பாசனப் பகுதியை பாலை நிலமாக்கும்.

              காவிரி நீரில் ஒரு சொட்டுக்கூட கொடுக்க மாட்டோம் என கொக்கரிக்கும் கர்நாடகத்திற்கு துணைப் போகும் முடிவாகவே இவ்வறிவிப்புகள் உள்ளன. தமிழகத்திற்கு ‘காவிரி நீர் தேவையே இல்லைஎன கர்நாடகம் நீதிமன்றத்தில் கூற வழிவகை செய்யவே தமிழக அரசின் இச்செயல்பாடு உதவும்.

              தமிழக அரசே கூட காவிரி நீரை திறந்து விட கர்நாடகம் மறுப்பது, நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விரோதமானது என அறிவித்துள்ளது. நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பு ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் சட்டபடி நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தீர்ப்பு. ஆனால் கர்நாடக அரசு சட்டத்தை மீறி செயல்படும் அரசாக இருக்கிறது. இந்திய அரசும் இச்சட்ட மீறலுக்கு துணைப் போகிறது.

ஆகவே சட்டப்படி தரவேண்டிய நீரை மறுத்து தமிழகத்தின் மீது ஒரு பொருளாதார தடையையும் சட்ட மீறலையும் நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கும் கர்நாடகத்திற்கு செல்லும் பாதைகளை மூடி, தமிழக அரசு ஒரு பொருளாதார தடையை விதிப்பதில் தவறொன்றுமில்லை. அதே போல் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தும் நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

       இதை விடுத்து நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத கர்நாடகத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பதால் காவிரியில் நீர் வரப் போவதில்லை.

       எனவே தமிழக அரசு சம்பா சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய புதிய உத்திகள் குறித்து உழவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை கைவிட்டு காவிரி நீரைப்பெற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தமிழக உழவர் முன்னணி கோருகிறது.
இப்படிக்கு